மும்பை: 'கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, திருமண விழாக்கள் ரத்து செய்யப்படுவதால், நகை விற்பனை பெருமளவு குறைந்துள்ளது' என, வியாபாரிகள் கூறினர்.
நாடு முழுவதும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, நகை கடைகளுக்கு, 20 முதல், 25 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே வருகின்றனர். இதனால், தங்கம் மற்றும் வைர நகைகளின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய ஜெம் அண்டு ஜுவல்லரி கவுன்சில் தலைவர், அனந்த பத்மநாபன் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவி வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'ஷாப்பிங் மால்' உள்ளிட்ட, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே, வெளியே வருகின்றனர். இதனால், நாடு முழுவதும், நகை கடைகளுக்கு வருவோர் எண்ணிக்கை, 25 சதவீதமாக குறைந்துள்ளது.
இது, நிதி ஆண்டின் இறுதி மாதம் என்பதால், வரி தொடர்பான கணக்குகளை முடிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., மற்றும் முன்கூட்டியே செலுத்தும் வருமான வரி போன்றவற்றுக்கு இடையே, விற்பனை வெகுவாக குறைந்துள்ளது .இவ்வாறு, அவர் கூறினார்.
திருமண விழாக்கள் ரத்து; நகை விற்பனை மந்தம்